தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேசமயம் இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே இன்று டிடிவி தினகரன் NDA கூட்டணியை உறுதி செய்தார். இதரைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையை புதிய தமிழகம் கட்சி இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அக்கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி நடைபெற உள்ள மெகா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து NDA கூட்டணியில் இணைய தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியையும் இந்த கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் திட்டத்தின் படி இவர்கள் எல்லாம் NDA கூட்டணியில் இணைந்தால் திமுகவுக்கு வருகின்ற தேர்தல் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தெரிகிறது.
