ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சனிக்கிழமை இரவு நேரிட்ட கோர விபத்து, சமூக வலைதள மோகமும் அஜாக்கிரதையும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது. ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு தேநீர் அருந்துவதற்காக ஆறு நண்பர்கள் காரில் சென்றபோது, அதிகப்படியான வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் முகமது அயன், ஆதில் குரேஷி, ஷெர் முகமது மற்றும் குலாம் கவாஜா ஆகிய நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகிழ்ச்சியாகத் தொடங்கிய அந்தப் பயணம், சில நிமிடங்களிலேயே மரண ஓலமாக மாறியது ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட 9 நிமிட வீடியோ, விபத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. 19 வயதான ஷெர் முகமது என்பவர் சிகரெட் புகைத்துக்கொண்டும், உரத்த இசையை ஒலிக்கவிட்டபடியும் அதிவேகமாக காரை ஓட்டியுள்ளார். கார் மணிக்கு 100 கிலோமீட்டரைக் கடந்தபோது, பின்னால் இருந்த நண்பர்கள் அதை உற்சாகமாகப் படம் பிடித்துள்ளனர். வேகம் 120 முதல் 140 கிலோமீட்டரைத் தொட்டபோது, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நண்பர்கள் “வேகத்தைக் குறை” என்று எச்சரித்தும், ஓட்டுநர் அதைக் கேட்கவில்லை. அடுத்த சில நொடிகளில் நிகழ்ந்த விபத்து, பலரது கனவுகளைச் சிதைத்துவிட்டது.
விபத்திற்குப் பின் இருட்டில் ஒலிக்கும் “என்னை காப்பாற்றுங்கள், என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்ற இளைஞனின் கதறல் பதிவு, கேட்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது. இந்த விபத்தில் இரு கார்களிலும் பயணம் செய்த மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூக வலைதளங்களில் பகிரப்படும் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்களுக்காகவும், தற்காலிகப் புகழுக்காகவும் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பது பெருகி வருகிறது. அதிவேகம் என்பது சாகசமல்ல, அது தற்கொலைக்குச் சமம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
