தினமும் 15 கிலோ அவுட்…! கழிவு மூட்டைக்குள் கோழிக்கறி கடத்தல்…! வசமாக சிக்கிய ஊழியர்கள்… பகீர் மோசடி…!!

By Devi Ramu on தை 20, 2026

Spread the love

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஒரு கோழி இறைச்சி கடையில், உரிமையாளரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஊழியர்களே லட்சக்கணக்கில் மோசடி செய்த அதிரடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுஜன் என்பவரது கடையில் பணியாற்றிய நான்கு ஊழியர்கள், கடந்த பத்து மாதங்களாகத் திட்டமிட்டு இறைச்சியைத் திருடி வந்துள்ளனர். தினமும் வாடிக்கையாளர்களுக்கு வெட்டப்படும் கறியில் ஒரு பகுதியை லாவகமாகப் பிரித்து, சுமார் 15 கிலோ வரை ‘சைடு பிசினஸ்’ செய்துள்ளனர். கோழிக் கழிவுகளைக் கொட்டச் செல்வது போல நடித்து, இறைச்சியை மூட்டையில் பதுக்கிக் கடத்திச் சென்று உணவகங்களுக்குக் குறைந்த விலைக்கு விற்றுப் பணத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

|விற்பனை அதிகமாக இருந்தும் வருமானம் இல்லாததால் சந்தேகமடைந்த உரிமையாளர், ரகசியமாகக் கண்காணித்தபோது இவர்களது தில்லுமுல்லு பிடிபட்டது. சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான இறைச்சியைத் திருடியதை ஊழியர்களே ஒப்புக்கொண்ட நிலையில், உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் அசார், இஸ்மாயில் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு நாளைக்கு 15 கிலோ வீதம் மாதக்கணக்கில் இவர்கள் செய்த இந்த நூதனத் திருட்டு, அப்பகுதி வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.