இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரைத் தீக்குளிக்கத் தூண்டிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான அனுஷ்வரன் என்ற கூலித் தொழிலாளி, குடும்பப் பிரச்சினை மற்றும் பணத் தகராறு காரணமாக தனது 31 வயது மனைவி பிரகலாதேவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மனைவியின் கற்பு குறித்துச் சந்தேகமடைந்த கணவர், “நீ உண்மையான பத்தினி என்றால் தீயிட்டு நிரூபி” எனக் கூறி, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியையும் கொடுத்துள்ளார்.
கணவன் சவால் விட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அந்தப் பெண் தன் மீது தீ வைத்துக் கொண்டார். வலியால் அவர் அலறியதைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மட்டக்களப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் உடலில் பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியின் இந்த அதிரடி முடிவைக் கண்டு நிலைகுலைந்து போன கணவன், குற்ற உணர்ச்சியால் தானும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தகவலறிந்து வந்த கொக்கட்டிச்சோலை காவல்துறையினர், மனைவியை கொலை செய்ய முயற்சி செய்தல் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அனுஷ்வரனை கைது செய்துள்ளனர். தற்போது கணவன், மனைவி இருவருமே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சந்தேகம் மற்றும் முரட்டுத்தனமான பிடிவாதம் ஒரு அழகான குடும்பத்தை எப்படிச் சிதைக்கும் என்பதற்கு இந்தச் சோகமான சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
