“நீதான்டா நல்ல ஃப்ரண்ட்”… ஆட்டோவோடு நண்பனை உயிரோடு எரித்த 3 பேர்.. காசியாபாத்தில் நடந்த நரபலி பயங்கரம்…!

By Nanthini on தை 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆட்டோ ஓட்டுநரான நவீன் (எ) நந்து என்பவரை, அவரது நெருங்கிய நண்பர்களான பவன், சாகர் மற்றும் நசீம் ஆகிய மூவர் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்து ஆட்டோவுடன் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் நவீன் அடிக்கடி ஒரு சாமியாரைச் சந்தித்து வந்துள்ளார். அப்போது அந்த சாமியார், “பொருளாதார ரீதியாக உயர வேண்டுமானால் நெருக்கமான ஒருவரை நரபலி கொடுக்க வேண்டும்” எனக் கூறியதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை நவீன் தனது நண்பர்களிடம் பகிர்ந்ததோடு, “ஒரு நண்பரைப் பலி கொடுக்கலாமா?” எனச் சாமியாரிடம் கேட்டதாகக் கூறியது நண்பர்களுக்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது.

சம்பவம் நடந்த அன்று, நான்கு நண்பர்களும் சாகர் என்பவரது வீட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சாமியார் சொன்ன விஷயம் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நவீன் தங்களை எங்கே பலி கொடுத்துவிடுவாரோ என்ற பயத்தில், நண்பர்கள் மூவரும் சேர்ந்து சிறிய எரிவாயு சிலிண்டரால் நவீனின் தலை மற்றும் முதுகில் தாக்கி அவரைக் கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைக்கத் திட்டமிட்ட அவர்கள், நவீனின் உடலைப் போர்வையில் சுற்றி அவரது சொந்த ஆட்டோவிலேயே வைத்து ஆளில்லாத பகுதிக்குக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

   

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காசியாபாத் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நவீன் கடைசியாகத் தனது நண்பர்களுடன் மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாகர் மற்றும் பவன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு நண்பரான நசீமைத் தேடி வருகின்றனர். மூடநம்பிக்கையின் காரணமாக நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல், ஒரு உயிரைப் பறித்ததோடு மற்றவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.