“அல்ற சில்ற ஐடி விங்.. கனவு பலிக்காது”… ரஜினி பாணியில் திமுகவினரை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்.. பரபரப்பு பதிவு….!

By Nanthini on தை 18, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணி விவகாரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு கோரியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் காங்கிரஸை விட்டு வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன்  கூட்டணி அமைக்க விரும்புவதாகவும், ஆனால் காங்கிரஸ் தலைமை திமுக உடனான கூட்டணியை உறுதி செய்ததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்தச் சூழலில், திமுக நிர்வாகி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றும் திட்டம் தோல்வியடைந்ததால் மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகப் பதிவிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியது.

   

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான எதிர்வினையாற்றியுள்ளார். “அல்ற சில்ற ஐடி விங் (IT Wing) கனவு பலிக்காது கண்ணா! நான் ஒரு உண்மையான காங்கிரஸ்காரன்” என்று பதிவிட்டு, தான் கட்சியை விட்டு விலகப்போவதாக வெளியான தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.