சென்னையில் தனது உடல் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையால் எம்பிஏ மாணவி ஒருவர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருங்களத்தூரைச் சேர்ந்த யுவஸ்ரீ(25) என்ற அந்த இளம்பெண், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டே தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்த நிலையில், இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது. தனது அக்கா சிவப்பாக இருந்ததால் அவருக்கு எளிதில் திருமணம் முடிந்துவிட்டதாகவும், தான் கருப்பாக இருப்பதால் தனக்கு வரன் அமைவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் அடிக்கடி பெற்றோரிடம் கூறி வருந்தியதாகத் தெரிகிறது.
பெற்றோர்கள் அவருக்குப் பலமுறை ஆறுதல் கூறியும், மன உளைச்சலில் இருந்த யுவஸ்ரீ தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதத்தில், தனது முடிவிற்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நேப்பியர் பாலத்தில் கண்டெடுக்கப்பட்ட அவரது பையில் இருந்த அடையாள அட்டையின் மூலம் போலீசார் அவரை அடையாளம் கண்டனர். நிறத்தை ஒரு தகுதியாகக் கருதும் சமூகப் பார்வையின் தாக்கத்தால், ஒரு திறமையான மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
