“கோடாரியால் வெட்டிய 17 வயது சிறுவன்”… மகனுக்காக உயிரையே விட்ட தாய்…. ராசிபுரத்தில் அதிர வைக்கும் சம்பவம்…!

By Nanthini on தை 14, 2026

Spread the love

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நிகழ்ந்த ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேளுக்குறிச்சியைச் சேர்ந்த 42 வயதான கதிரவன் என்ற ஆட்டோ ஓட்டுநரை, 17 வயது சிறுவன் ஒருவன் முன்விரோதம் காரணமாக கோடாலியால் கழுத்தில் வெட்டியுள்ளான். பொது இடத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் கதிரவன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததைக் கண்டு, அவரது தாய் ஜானகி (65) நிலைகுலைந்து போனார். தன் மகன் படுகாயமடைந்து கிடப்பதைக் கண்ட அதிர்ச்சியில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் ஜானகியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். படுகாயமடைந்த கதிரவன் தற்போது நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மகனின் நிலையைக் கண்டு தாய் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.