இரவு சிரித்து விளையாடிய இரண்டரை வயது குழந்தை… மறுநாள் காலை வாயில் நுரை தள்ளி… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

By Nanthini on தை 13, 2026

Spread the love

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே கட்டிலிலிருந்து கீழே விழுந்த இரண்டரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் மற்றும் ரஞ்சிதா தம்பதியினரின் மகன் யுகப்பிரியன், இரவு நேரத்தில் கட்டிலில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்துள்ளார். அந்த நேரத்தில் குழந்தையை சமாதானப்படுத்தி தூங்க வைத்த தந்தை, மறுநாள் காலையில் பார்த்தபோது குழந்தையின் வாயில் நுரை தள்ளியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை யுகப்பிரியன் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தையின் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.