பெங்களூரு கே.ஆர்.புரம் ரயில் நிலையம் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த லட்சுமி என்ற ஊர்க்காவல்படை வீராங்கனை, மோகினி என்ற இளம்பெண்ணால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரைகுறை ஆடையுடன் சுற்றித் திரிந்த அந்தப் பெண்ணை இளைஞர்கள் கேலி செய்ததைக் கண்ட வீராங்கனை, தகுந்த ஆடைகளை அணியுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், வீராங்கனையை நடுரோட்டில் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து முகத்தில் பலமாகக் குத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் வீராங்கனையின் முகத்தில் ரத்தம் வழியத் தொடங்கியதைக் கண்டு அங்கிருந்த மக்கள் திரண்டு வந்து அந்தப் பெண்ணைத் தடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நாராயணபுரா பகுதியைச் சேர்ந்த மோகினியைக் கைது செய்தனர். மாலத்தீவில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், பெங்களூருவில் கல்லூரிப் பயின்றவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அரசு ஊழியரைத் தாக்கிப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
