தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலும், அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அதிரடி அரசியல் நகர்வுகளும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதில் அன்புமணி ராமதாஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக ராமதாஸ் எடுத்து வரும் முடிவுகள் அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளன. ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்தும் நோக்கில், அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் தனது மகன் அன்புமணி ஆகிய மூவருக்குமே ராமதாஸ் செக் வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த அரசியல் குழப்பம் முதன்மையாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கே பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் அ.தி.மு.க.விற்கு, பலமான கூட்டணியாகத் தெரிந்த பா.ம.க. தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்பது தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் காரணியாக மாறியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் தடம் பதிக்க முயலும் பா.ஜ.க., பா.ம.க.வின் இந்த உட்கட்சிப் பிளவால் தனது தேர்தல் வியூகங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பு தி.மு.க. கூட்டணியை நோக்கிய மறைமுக சமிக்ஞைகளை வெளிப்படுத்துவது இக்கூட்டணிக்கு விடப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நகர்வு அன்புமணி ராமதாஸின் அரசியல் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் கருதப்படுகிறது. கட்சியைக் கைப்பற்றி அதிகார அரசியலை நோக்கிப் பயணிக்கும் அன்புமணியின் வேகத்திற்குத் தடையாக, தைலாபுரத் தரப்பு மாற்று வழிகளைத் திறந்து வைத்திருப்பது கூட்டணியில் அன்புமணியின் பேரம் பேசும் வலிமையைக் குறைத்துள்ளது. “பாமக என்றால் அது ராமதாஸ் தான்” என்ற செய்தியை உரக்கச் சொல்வதன் மூலம், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விற்கு அழுத்தம் கொடுத்து கூடுதல் இடங்களைப் பெறுவது அல்லது தி.மு.க.வுடன் இணைந்து எதிர்த்தரப்பை வீழ்த்துவது என ராமதாஸ் வகுத்துள்ள வியூகம் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
