தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சபில்குடா பகுதியில் அமைந்துள்ள கட்டா மைசம்மா கோவிலில் நடந்த அருவருப்பான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டத்தைச் சேர்ந்த அல்தாப் (26) என்ற இளைஞர், நேற்றைய தினம் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த சாமி சிலையின் முன் சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், உடனடியாக அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்ததுடன், அவரைப் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. புனிதமான வழிபாட்டுத் தலத்தில் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அல்தாப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மத உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய செயல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
