தமிழக அரசின் 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், அதனை ஆளுங்கட்சியினர் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் இது குறித்துக் குற்றம்சாட்டி வந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
அங்குள்ள ஒரு நியாயவிலைக் கடையில் , அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து திமுக நிர்வாகி ஒருவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட காலண்டர் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. அரசுத் திட்டங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது தனிப்பட்ட கட்சி விளம்பரங்களைப் புகுத்துவது விதிமீறல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் அல்லது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
