கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள கத்ரா கேபிசி காலனியில், வகுப்புத் தோழனின் துன்புறுத்தல் காரணமாக 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ரிச்செல் பிரான்சிஸ் டி’சோசா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நந்தனகட்டாவைச் சேர்ந்த சிராக் சந்திரஹாஸ் கோதர்கர் (21) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிச்சலும், சிராக் இருவரும் வகுப்புத் தோழர்கள் என்றும், கடந்த பல ஆண்டுகளாகப் பழகி வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சிராக், கடந்த சில காலமாகவே ரிச்சலின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதுடன், தனது காதலை ஏற்குமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ரிச்சல் அவரது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சிராக், நீ என் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், வாழ்வதில் அர்த்தமில்லை, இறந்துவிடு’ என்று மனரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். சிராக்கின் இத்தகைய தொடர் வற்புறுத்தலும், தற்கொலைக்குத் தூண்டும் விதமான கொடூரமான வசவுகளுமே அந்த இளம்பெண் உயிரை மாய்த்துக்கொள்ளக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
