2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், சென்னை வேளச்சேரி தொகுதி மிக முக்கியமான களமாக உருவெடுத்துள்ளது. இங்கு திமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே இளைஞர் அணி நிர்வாகிகளைப் போட்டியிட வைக்கத் திட்டமிட்டு வருகின்றன. திமுக தரப்பில் இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ள நிலையில், அவருக்குப் போட்டியாக பாஜக தனது மாநில இளைஞரணி தலைவர் சூர்யாவைக் களம் இறக்க ஆலோசித்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் தமிழக பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜனும் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட விருப்பம் காட்டி வருகிறார். இருப்பினும், கடந்த தேர்தல்களில் அவர் வெற்றி பெறாததைக் காரணம் காட்டி, தலைமை இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. வேளச்சேரியில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழிசையின் கனவு பலிக்குமா அல்லது இளைஞரணி நிர்வாகிகள் மோதிக் கொள்ளும் தொகுதியாக இது மாறுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
