மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 8-வது ஊதியக்குழுவின் அமலாக்கம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஆணையம் இது தொடர்பான பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், புதிய ஊதியப் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் கொள்கையளவில் அமலுக்கு வரும் என்று கருதப்படுகிறது.
எனினும், இந்த ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்து அரசு அதற்கு ஒப்புதல் அளிக்க சுமார் 15 மாதங்கள் வரை ஆகலாம் என்பதால், 2027-ம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, ஊழியர்களுக்கு 15 மாத காலத்திற்கான நிலுவைத் தொகை (Arrears) மொத்தமாக வழங்கப்படக்கூடும், இது உயர் அதிகாரிகளுக்கு சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்க வாய்ப்புள்ளது.
சம்பள உயர்வு மற்றும் அரியர் தொகை கணக்கீடு என்பது ஊழியர்கள் கோரும் ‘ஃபிட்மெண்ட் ஃபாக்டரை’ (Fitment Factor) பொறுத்தே அமையும். ஊழியர் சங்கங்கள் 3.68 ஃபிட்மெண்ட் ஃபாக்டரைக் கோரி வரும் நிலையில், அரசு 2.57 முதல் 2.86 வரை வழங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 25% முதல் 35% வரை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
உதாரணத்திற்கு, ஒரு ஊழியரின் மாதச் சம்பளம் 10,000 ரூபாய் உயர்ந்தால், அவருக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை அரியர் தொகை கிடைக்கும். மேலும், 8-வது ஊதியக்குழு அமலாகும் போது அகவிலைப்படி (DA) பூஜ்ஜியமாகி, அந்தத் தொகை அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்படும் என்பதால் ஊழியர்களின் ஒட்டுமொத்த வருவாய் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும், ஓய்வூதியமும் ஜனவரி இறுதிக்குள் உயரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆலோசிக்க 8-வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி, 2.57 Fitment Factor அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய அடிப்படை சம்பளம் ₹18 ஆயிரமாக இருந்தால் 1.92 Fitment Factor அடிப்படையில் ₹34 ஆயிரம் வரை உயரலாம்.
