ஊரே நடுங்கும் 13 ஆண்டுகால மர்மம்… பூட்டிய வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி… எலக்ட்ரீசியன் கண்ட பயங்கர காட்சி…!

By Nanthini on தை 10, 2026

Spread the love

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 13 ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்த ஒரு பழைய வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் அருகே முன்னாள் வங்கி ஊழியரான மேத்யூ என்பவருக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. மேத்யூவின் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் கோவைக்குக் குடிபெயர்ந்ததால், அந்த வீடு கடந்த 13 ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி பூட்டியே கிடந்துள்ளது.

சமீபத்தில் மேத்யூவின் மகன் பிரசாந்த், அந்த வீட்டைச் சுத்தம் செய்து மின் இணைப்புகளைச் சீரமைப்பதற்காகத் தனது நண்பரான சசி என்ற எலக்ட்ரீசியனை அனுப்பியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு வீட்டைத் திறந்து உள்ளே சென்ற சசி மற்றும் பணியாளர்கள், அங்குள்ள படுக்கையறை மெத்தையில் ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாகக் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர். உடனடியாக இது குறித்துக் கோத்தகிரி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

   

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அந்த வீடு நீண்ட நாட்களாகப் புழக்கத்தில் இல்லாததால், மதுப்பிரியர்கள் யாராவது ஜன்னல் வழியாகவோ அல்லது வேறு வழியிலோ உள்ளே புகுந்து தங்கியிருக்கலாம் என்றும், அப்போது அந்த நபர் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், எலும்புக்கூடாக மீட்கப்பட்ட நபர் யார், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது.

   

உடற்கூறு ஆய்வுக்காக ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த சில ஆண்டுகளில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாயமான நபர்களின் பட்டியலை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 13 ஆண்டுகளாகப் பூட்டிக்கிடந்த வீட்டிற்குள் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த ஊர் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.