பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பகுதிநேரமாக ‘ராபிடோ’ பைக் ஓட்டிய தனது அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தினமும் இரவு நேரங்களில் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வேலை செய்த அவர், நான்கு நாட்களில் மொத்தம் 1,820 ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் நிறுவனம் வழங்கும் கூடுதல் ஊக்கத்தொகை மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, பெட்ரோல் செலவு போக இந்த வருமானத்தைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுநேரப் பணியாக இல்லாமல், அவசரத் தேவைக்கும் கூடுதல் வருமானத்திற்கும் இந்த வேலை ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நான்கு நாட்களில் சுமார் 200 கிலோமீட்டர் பயணம் செய்துள்ள இவர், சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக்கைப் பயன்படுத்தியுள்ளார். உடனடிப் பணத்தேவை உள்ள பைக் உரிமையாளர்களுக்கு இது ஒரு பயனுள்ள பகுதிநேரத் தொழில் என்ற இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே வைரலாகி வருகிறது.
