உடலுக்குத் தேவையான சத்தான உணவுகளைச் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைச் சரியான நேரத்தில் உட்கொள்வதும் அவ்வளவு அவசியம் என்று மருத்துவர் பிரியங்கா ஷெக்ராவத் எச்சரிக்கிறார். பலர் காலை உணவை மதியமும், இரவு உணவை நள்ளிரவிலும் என தவறான நேரங்களில் சாப்பிடுவதால் ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய பழக்கம் உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீர்குலைப்பதுடன், சாதாரணத் தலைவலியை விடவும் பல நாட்கள் நீடிக்கக்கூடிய தீராத வலியை உண்டாக்கும் என அவர் கூறுகிறார்.
இந்த ஒற்றைத் தலைவலி ஒருமுறை தொடங்கிவிட்டால் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை கூடத் தொடரக்கூடும் என்பதால், முறையற்ற உணவுப் பழக்கத்தைக் கைவிடுவது ஒன்றே இதற்குத் தீர்வாகும். குறிப்பாகக் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே சரியான நேரத்திற்குச் சாப்பிடும் பழக்கத்தைக் கற்றுத்தர வேண்டும். ஆரோக்கியமான உடல்நலனைப் பேண வேண்டுமென்றால், நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துவிட்டுத் தினமும் ஒரு குறிப்பிட்ட சீரான நேரத்தைப் பின்பற்றி உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
