அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிகிதா கோடீஷலா என்ற 32 வயது இந்திய பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மாயமான நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் டிக்கிக்குள் இருந்து அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அர்ஜுன் சர்மா (32) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிரிழந்த நிகிதா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது . இவருடைய உயிரிழப்பு தொடர்பாக குடும்பத்தினர் கண்ணீருடன் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதாவது நிகிதா மற்றும் அர்ஜுன் சர்மா ஆகிய இருவரும் சில காலம் ஒரே அறையில் தங்கி இருந்ததாகவும் அப்போது அர்ஜுன் ஷர்மா நிகிதாவிடம் இருந்து சுமார் 50,000 அமெரிக்க டாலர்களை கடனாக பெற்றதாகவும் தெரிகிறது. அந்த பணத்தை திரும்ப கேட்டதால் ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நிகிதாவின் தந்தை கூறுகின்றார். கடனாக பெற்ற பணத்தை நிக்கிதா தொடர்ந்து கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அர்ஜுன் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த கொலையை செய்த பிறகு அர்ஜுன் ஷர்மா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நிகிதாவின் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அந்தச் செய்தியில் நிகிதாவை கொன்றதை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டதுடன் தானும் வாழப்போவதில்லை என்று குறிப்பிட்ட உள்ளார். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அர்ஜுன் சர்மா உயிருடன் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
