தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்து நாஞ்சில் சம்பத் கன்னியாகுமரியில் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் ஒரு மாற்று அரசியலுக்கான தேவை இருப்பதாகவும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் ஆச்சரியமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தவெக என்ற நந்தவனத்தில் பல கட்சிகள் இணைய விரும்புவதாகவும், காங்கிரஸ் கட்சியும் தவெகவுடன் கூட்டணி வைக்கவே ஆசைப்படுகிறது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டை விளக்கும் விதமாக, “தவெக மீதுதான் காதல், ஆனால் திமுகவைத்தான் திருமணம் செய்து கொண்டுள்ளோம்” என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தன்னிடம் ரகசியமாகப் பகிர்ந்துகொண்டதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகள் இப்போதே தொடங்கிவிட்டதை உணர்த்தும் வகையில் அவரது இந்தப் பேச்சு அமைந்துள்ளது.
