எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் நிறுவனம் (EPFO), சந்தாதாரர்கள் தங்களின் சேமிப்புப் பணத்தை எடுக்கும் நடைமுறையில் ‘EPFO 3.0’ என்ற புதிய விதிகளின் கீழ் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இனி வேலை இழந்தவுடன் காத்திருக்கத் தேவையில்லாமல், பி.எஃப் கணக்கில் உள்ள 75 சதவீதத் தொகையை உடனடியாகத் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் மீதமுள்ள முழுப் பணத்தையும் எடுக்க ஓராண்டு காலம் வரை காத்திருக்க வேண்டும். மேலும், பென்ஷன் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 36 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், சொந்தமாக வீடு வாங்குவதற்கு பி.எஃப் பணம் கோருவோருக்கான குறைந்தபட்ச பணிக்காலம் 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
திருமணம் மற்றும் கல்வி போன்ற தனிப்பட்ட தேவைகளுக்காகப் பணம் எடுக்கும் வசதிகளில், முறையே 5 மற்றும் 10 முறை வரை வித்ட்ரா செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் 12 மாத பணி அனுபவம் இருந்தால் பகுதியளவு பணம் எடுக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
ஒரு நிறுவனம் மூடப்படும் பட்சத்தில் 75 சதவீதத் தொகையை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள 25 சதவீதத்தை கணக்கில் வைத்திருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் மூலம் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் வழிவகை செய்கின்றன.
