உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான ஆறு வயது சிறுமி மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்தசஹார் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் மொட்டை மாடியில் இருந்து விழுந்ததாக கூறப்பட்டது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த சிறுமியின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சிறுமியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் அளித்த புகாரில், தன்னுடைய மகள் வழக்கம் போல வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அந்த குடியிருப்பின் பின்புறம் உள்ள நிலத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டார். குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும் ராஜு மற்றும் வீறு காஷ்யப் ஆகியோர் தன்னுடைய மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருப்பதை கண்டறிந்து அவர்களை பிடிக்க சென்ற போது தப்ப முயன்றதால் இருவரையும் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
