தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கி தீவிரமாக தேர்தல் பணியில் செயலாற்றி வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுகவுக்கு போட்டியாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. விஜய் அரசியலில் இறங்கிய பிறகு மாற்றுக் கட்சியினர் பலரும் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். அதேசமயம் திமுகவும் தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைத்து வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரியின் நாகர்கோவிலை சேர்ந்த முத்துகிருஷ்ணன் தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் நேற்று இணைத்துக் கொண்டனர். அதேபோல தஞ்சை பட்டுக்கோட்டையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியிலிருந்து விலகிய திமுகவில் தங்களை இணைத்தனர். மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதியை சேர்ந்த திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய பலர் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏவும் ஆன பவுன்ராஜ் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பானங்குளத்தில் நேற்று நடந்த ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி பொதுக்கூட்டத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர் கரிகால பாண்டியன் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்துறை சேர்ந்த மாற்றுக் கட்சியில் இருந்து விலகி ஐம்பதுக்கு மேற்பட்டோர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர். இப்படி மாற்றுக் கட்சியினர் பலரும் தொடர்ந்து கட்சித்தாவி வருவது தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாகியுள்ளது.
