சிங்கப்பூரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் அமன் என்ற இந்தியர், வெளிநாட்டு வாழ்க்கையில் தான் சந்திக்கும் தனிமை மற்றும் மன உளைச்சல் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அங்கு சென்ற பிறகு தனது வருமானம் ஐந்து மடங்கு அதிகரித்த போதிலும், மன நிம்மதி அடியோடு குறைந்துவிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நண்பர்களுடன் தெருவோர உணவுகளை ரசித்து உண்ட அந்தச் சுதந்திரமான நாட்களையும், சொந்த ஊரின் வாசனையையும் டாலர் சம்பளத்தால் ஈடுகட்ட முடியவில்லை என்பதே அவரது பதிவின் முக்கியக் கருத்தாக உள்ளது. சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் தூய்மையும் வசதிகளும் அபாரமாக இருந்தாலும், மனித உறவுகளுக்கு இடையே ஒருவித செயற்கைத்தனம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் காரை எடுத்துக்கொண்டு நீண்ட தூரம் பயணித்த சுதந்திரம், திட்டமிடப்படாத நண்பர்களின் சந்திப்புகள் போன்றவை அங்கு சாத்தியமில்லை என்றும், வாழ்க்கை வெறும் காலண்டர் தேதிகளுக்குள் சுருங்கிவிட்டதாகவும் அவர் வருந்துகிறார்.
