பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகள் வழிப் பேரனும், அக்கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினருமான சுகுந்தன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை ‘பதவி வெறி’ பிடித்தவர் என மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். சேலத்தில் இன்று நடைபெற்று வரும் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “அவுரங்கசீப் முதல் அன்புமணி வரை பதவிக்காகத் தந்தையை எதிர்த்துள்ளனர்” எனத் தாக்கிப் பேசினார். வாரிசு அரசியல் மற்றும் கட்சிப் பதவிகள் வழங்கப்படுவதில் நிலவும் பாரபட்சத்தை முன்வைத்து அவர் பேசியது பொதுக்குழுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் கட்சியில் சேர்ந்த உடனேயே பதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம், ஆனால் என் தம்பி முகுந்தன் கட்சிப் பொறுப்புக்குக் கூட வரக்கூடாதா? உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” எனக் காட்டமாக கேள்வி எழுப்பினார். அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகள் மற்றும் கட்சி நிர்வாகம் குறித்து அவரது குடும்ப உறுப்பினரே பொதுமேடையில் இவ்வாறு விமர்சித்துள்ளது பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அக்கட்சியின் உள்விவகாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
