நடிகர் சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மமீதா பைஜூ நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார் ரவீனா தாண்டன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சூர்யா 46 படத்தின் கதை குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி முக்கிய தகவலை கூறியிருக்கிறார். இதுகுறித்து நாக வம்சி கூறுகையில், சூர்யா 46 படத்தின் கதை 45 வயது இளைஞனுக்கும் 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. இந்த படம் பலவிதமான உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும். மேலும் கஜினியில் வரும் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தின் பாணியில் இருக்கும் என்றும் நாகவம்சி கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
