உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற யூடியூபரான அனுராக் திவேதி, சமீபத்தில் துபாயில் உள்ள ‘குயின் எலிசபெத் 2’ என்ற பிரம்மாண்ட சொகுசுக் கப்பலில் தனது தோழியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த ஆடம்பர திருமணத்திற்காகச் சுமார் 130 உறவினர்களை ஐந்து தனி விமானங்கள் மூலம் அழைத்துச் சென்றதுடன், அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் இவரே கவனித்துள்ளார்.
பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்தத் திருமணம் இணையதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கான பல கோடி ரூபாய் நிதி எங்கிருந்து வந்தது என்பது குறித்து அமலாக்கத்துறை தற்போது தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கிரிக்கெட் தொடர்பான செயலிகள் மூலம் பிரபலமான இவர், ஏற்கனவே சில நிதி முறைகேடு புகார்களில் சிக்கியுள்ளார். சட்டவிரோதமாகச் சம்பாதித்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே இந்தத் திருமணத்தை அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்தினாரா? என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாகத் துப்புத் துலக்கி வருகின்றனர்.
திருமணத்திற்குச் செலவு செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணத்தின் ஆதாரம் குறித்து அமலாக்கத்துறை துருவித் துருவி விசாரித்து வருவதால், அந்த பிரபல யூடியூபருக்குச் சட்ட ரீதியான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.
