நடப்பு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் ஏற்கனவே திரும்ப வழங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், டிசம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை விமான தாமதம் மற்றும் ரத்தால் அவதிப்பட்ட பயணிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ரூ.10,000 மதிப்புள்ள சிறப்புப் பயண வவுச்சர்களை வழங்க இண்டிகோ முன்வந்துள்ளது.
இந்தச் சிறப்பு வவுச்சர்கள் வரும் டிசம்பர் 26-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன; இவற்றைப் பயணிகள் அடுத்த ஓராண்டு காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு விதிகளின்படி வழங்கப்படும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரையிலான இழப்பீட்டுத் தொகையுடன், இந்த வவுச்சரும் கூடுதலாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விமான நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவால், நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றமடைந்த பயணிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
