இந்தியாவில் தனிநபர் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகப் பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் மற்றும் மாதாந்திரத் தவணை (EMI) விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, குறைந்தபட்சமாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 8.75 சதவீத வட்டியிலும், ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் போன்ற வங்கிகள் 9.99 சதவீத வட்டியிலிருந்தும் கடன்களை வழங்குகின்றன.
நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை ஐந்து ஆண்டுகள் கால வரம்பில் கடனாகப் பெற்றால், வட்டி விகிதத்தைப் பொறுத்து சுமார் 2,064 ரூபாய் முதல் 3,297 ரூபாய் வரை மாதத் தவணையாகச் செலுத்த வேண்டியிருக்கும். கனரா வங்கி மற்றும் பஞ்சாப் சிந்த் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளும் 10 சதவீதத்திற்குள்ளான வட்டி விகிதத்தில் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.
அதே சமயம், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ போன்ற பெரிய வங்கிகள் 10 சதவீதத்திற்கு மேலான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளன. பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளரின் தகுதியைப் பொறுத்து 31 சதவீதம் வரை கூட வட்டி வசூலிக்கின்றன. ஒவ்வொரு வங்கியும் நிர்வாகச் செலவுக்காக ‘பிராசஸிங்’ கட்டணத்தைத் தனித்தனியாக வசூலிப்பதால், கடன் வாங்கும் முன் அதனைச் சரிபார்ப்பது அவசியமாகும்.
ஐந்து லட்ச ரூபாய் கடன் பெறுபவர்கள் மாதம் 10,319 ரூபாய் முதல் அதிகபட்சமாக 16,485 ரூபாய் வரை திருப்பிச் செலுத்த வேண்டி வரும். உங்கள் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்துச் சரியான வங்கியைத் தேர்ந்தெடுப்பது நிதிச் சுமையைக் குறைக்க உதவும்.
