மக்களே உஷார்..! இனி இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது…! இன்று முதல் அமலாகும் விதிமுறை…!!

By Devi Ramu on மார்கழி 18, 2025

Spread the love

டெல்லியில் நிலவும் மிக மோசமான காற்று மாசுபாட்டைக் குறைக்க அம்மாநில அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி, டிசம்பர் 18 முதல் செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படாது என சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார். நகரெங்கும் காற்றுத் தரம் மிகக் கடுமையான நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்களின் சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின்படி, பிற மாநிலங்களிலிருந்து வரும் பழைய ரக (BS-6-க்கு கீழான) வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டால் அவற்றைப் பறிமுதல் செய்வதுடன் மிக அதிக அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை விதிகளை மீறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சுமார் 9.21 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

   

குளிர் காலத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புப் பணியாளர்கள் நிலக்கரி அல்லது விறகுகளை எரிப்பதைத் தவிர்க்க 10,000 மின்சார ஹீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மாசு ஏற்படுத்தும் டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தும் திருமண மண்டபங்களுக்குச் சீல் வைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மாசுபாட்டை முழுமையாக ஒழிப்பது சவாலான காரியம் என்றாலும், தினசரி காற்றுத் தரத்தை மேம்படுத்த அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.