2026 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதிக்கு மாற்றாக கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இந்தக் கோட்டையைத் தகர்க்கவும், கொங்கு மண்டலத்தில் திமுகவின் கரங்களை வலுப்படுத்தவும் மேற்கு மண்டலப் பொறுப்பாளரான செந்தில் பாலாஜியை கோவையில் களமிறக்க திமுக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை இனி திமுகவின் கோட்டை என்று கூறி வரும் செந்தில் பாலாஜி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 50% வாக்குகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
