உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் நடந்த திருமண விழாவில், வரதட்சணையாக கார் மற்றும் ₹20 லட்சம் ரொக்கம் கேட்டு மிரட்டிய மணமகனை, மணமேடையிலேயே மணமகள் நிராகரித்த துணிச்சலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில் அதிபரான மணமகன் ரிஷப், திருமணச் சடங்குகள் தொடங்குவதற்குச் சற்று முன்பு, தான் கேட்ட வரதட்சணையைத் தரவில்லை என்றால் திருமணத்தை நிறுத்தி விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் மணமகள் ஜோதியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, ரிஷப்பிடம் பலமுறை கெஞ்சியும் அவர் பிடிவாதமாக இருந்துள்ளார். ரிஷப்பின் இந்தச் “பேராசை” மற்றும் தனது குடும்பத்தினரை விருந்தினர்கள் முன்னிலையில் அவர் அவமானப்படுத்தியதைக் கண்ட மணமகள் ஜோதி, உடனடியாகத் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.
“வரதட்சணை பேராசை பிடித்த இவரை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. என் குடும்பத்தை மதிக்காத ஒருவருடன் நான் வாழ முடியாது,” என்று அவர் கண்ணீருடன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ பரேலி காவல்துறையின் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கன்டோன்மென்ட் போலீசார் மணமகன் ரிஷப், அவரது தந்தை மற்றும் மைத்துனர் ஆகியோரை காவலில் எடுத்துள்ளனர். மணப்பெண் வீட்டார் முறையான புகார் அளித்த பிறகு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்கு முன்பு பல பொருட்களைக் கொடுத்து சுமார் ₹3 லட்சம் செலவு செய்த பிறகும், மணமகன் மேலும் வரதட்சணை கேட்டதால் மணமகள் இந்த உறுதியான முடிவை எடுத்துள்ளார்.
