லூலு குழுமத்தின் தலைவரும், உலகின் பிரபல இந்தியப் பணக்காரர்களில் ஒருவருமான யுசுப் அலி, துபாயில் பொதுப் பேருந்தில் ஏறும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அவரது எளிமையைப் பாராட்டும் விதமாகப் பலரையும் கவர்ந்துள்ளது. இவருக்கு லூலு ஹைப்பர் மார்க்கெட் சங்கிலி மற்றும் ஷாப்பிங் மால்ஸ் உலகம் முழுவதும் உள்ளன. ஃபோர்ப்ஸ் தகவலின்படி, இவரது மொத்தச் சொத்து மதிப்பு $5.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம்.
வைரலான அந்த வீடியோவில், யுசுப் அலி பேருந்தில் ஏறும்போதும், ஓட்டுநருடன் அன்பாகக் கைகுலுக்கி, இந்தியில் “எப்படி இருக்கிறீர்கள், நலமா?” என்று நட்புடன் விசாரிப்பதும் பதிவாகியுள்ளது. மேலும், அவர் பேருந்தில் இருந்த மற்றப் பயணிகளுடனும் உரையாடியது காணப்பட்டது.
View this post on Instagram
இந்த வீடியோ, முதலில் டிக்-டாக் தளத்தில் சஜ்ஜாத் ஃபர்தேஸ் என்ற பயனர் மூலமாகப் பகிரப்பட்டு, பின்னர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்களில் பரவியது. இந்தப் பதிவுக்குப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரை ‘மிகவும் பணிவான நபர்’ என்று புகழ்ந்துள்ளனர். அதேசமயம், ஒரு சில பயனர்கள் அவர் ஏன் பொதுப் பேருந்தில் பயணிக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வீடியோவுக்கு முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ‘Lessons from Life: Part-I’ என்ற புத்தகத்தின் கையொப்பமிட்ட பிரதியைப் பெற்றதற்காக யுசுப் அலி சமீபத்தில் கவனத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
