பெங்களூரில் செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்று இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2.5 லட்சம் மதிப்புள்ள செல்லப்பிராணியான Macaw வகை கிளியை காப்பாற்ற முயன்று பெங்களூரை சேர்ந்த 32 வயது தொழிலதிபர் அருண்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். செல்ல பிராணியான அந்த கிளி வெள்ளிக்கிழமை அருண்குமாரின் வீட்டில் இருந்து தப்பி சென்று அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது அமர்ந்துள்ளது.
உடனடியாக விரைந்து சென்று அதனை மீட்க வேண்டும் என்று உரிமையாளர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். அப்போது எஃகு குழாய் ஒன்றை எடுத்துக்கொண்டே மீட்பு நடவடிக்கையில் இறங்கிய போது துரதிஷ்டவசமாக அந்தப் பைப் மின்னழுத்த கம்பியில் பட்டுள்ளது. அப்போது உயர் மின்சாரம் தாக்கி அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே தகவல் அறிது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
