தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வந்த நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக ஏராளமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சுமார் 17 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு நேற்று ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பேருக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அதாவது மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும் நிராகரிக்கப்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களில் மேல்முறையீடு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
