சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி என்பவர், தனது கணவர் விஜய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் பிரியாணிக் கடையில் வேலை பார்த்த மீனாட்சி சுந்தரம்என்பவருடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்தத் தகாத உறவு காரணமாக, கணவரையும் குழந்தைகளையும் கொன்றுவிட்டுச் சுந்தரத்துடன் வாழ அபிராமி திட்டமிட்டார்.
கள்ளக்காதலன் சுந்தரம் கொடுத்த தூக்க மாத்திரை மற்றும் கருத்தடை மாத்திரைகளை பாலில் கலந்து அபிராமி தன் கணவருக்கும், ஏழு வயது மகன் அஜய் மற்றும் நான்கு வயது மகள் கார்னிகாவுக்கும் கொடுத்துள்ளார். அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் பிழைக்க, ஒரு குழந்தை மாத்திரையின் வீரியத்தால் இறந்தது. ஆனால், மற்றொரு குழந்தை சாகாததால், கோபத்தின் உச்சத்தில் அபிராமி, அந்தக் குழந்தையின் நெஞ்சு மீது ஏறி உட்கார்ந்து, தொண்டையை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்துக் கணவர் விஜய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பிச் செல்ல முயன்ற அபிராமியைப் போலீசார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு நீதிபதி செம்மல் தீர்ப்பு வழங்கினார்.
அதில், அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். காம இச்சைக்காக உலகமறியா குழந்தைகளைக் கொலை செய்ததை ஏற்க முடியாது என்றும், இந்தத் தீர்ப்பு இதுபோன்ற கொடூர செயல்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
