பயங்கரம்..! மதம் மாறி திருமணம்… மாப்பிள்ளை குடும்பத்தை வெட்டிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்ற குடும்பத்தினர்… பெண் வீட்டார் 9 பேர் கைது..!

By Soundarya on மார்கழி 12, 2025

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த காதல் ஜோடி வேளாங்கண்ணியில் திருமணம் செய்துகொண்டபோது, மணமகனின் குடும்பத்தினர் 4 பேரை வெட்டிவிட்டு மணப்பெண்ணைக் கடத்திச் சென்ற பயங்கரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நாகவரா பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் டேனியல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், இருவரும் பாதுகாப்பு கருதி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்தனர். அங்கு நேற்று (வியாழக்கிழமை) இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து திருமணம் முடிந்து அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு, பெங்களூருவில் இருந்து ஒரு கும்பல் கார்களில் வந்து இறங்கியது. அவர்கள் மணமகன் ராகுல் டேனியல், அவரது தாய் மற்றும் உறவினர்கள் உட்பட 4 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர், மணக்கோலத்தில் இருந்த கீர்த்தனாவை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு பெங்களூருவுக்குக் கடத்திச் சென்றனர். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் உடனடியாகச் செயல்பட்டனர். மணப்பெண்ணைக் கடத்திச் சென்ற வாகனங்களின் எண்களைக் கொண்டு அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

   

 ஓசூர் அருகே எல்லையில் வைத்து கடத்தல் கும்பலைச் சுற்றி வளைத்த தமிழகப் போலீசார், மணப்பெண்ணை மீட்டனர். வன்முறையில் ஈடுபட்ட மற்றும் கடத்தலுக்குத் துணை நின்ற மணப்பெண்ணின் உறவினர்கள் உட்பட 9 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். வெட்டுக்காயமடைந்த ராகுல் டேனியல் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காதல் திருமணம் செய்த காரணத்திற்காக, சொந்த மகளையே கடத்தி, மணமகன் குடும்பத்தை வெட்டிய இந்தச் சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.