தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் அரசியல் நகர்வு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுகவுக்கு தற்போது பெரும் போட்டியாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி மாறியுள்ளது. விஜய்க்கு மேலும் பலத்தை கூட்டும் வகையில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்தார். இன்னும் சில அமைச்சர்களை கட்சியில் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பலம் கூடிக்கொண்டே செல்லும் நிலையில் விஜயின் முன்னாள் மேனேஜர் செல்வகுமார் திமுகவில் இணைந்துள்ளார்.
அவருடைய இந்த இணைப்பு அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு தூணாக இருந்தேன், ஆனால் உழைத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என விஜய்யின் முன்னாள் மேலாளர் செல்வகுமார் குற்றம் சாட்டினார். விஜய்க்காக ஆரம்ப காலத்தில் இருந்து உழைத்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல எஸ்.ஏ சந்திரசேகருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று சாடிய அவர், திமுகவின் கட்டமைப்பு தன்னை ஈர்த்ததால் கட்சியில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
