தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட தயாராகி வருகின்றது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை தொடர்பான வாக்குறுதி தான் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு கை கொடுத்தது. எனவே 2023 ஆம் ஆண்டு முதல் சுமார் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், கூடுதல் பயனாளிகளை இணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக பலரும் புதிதாக விண்ணப்பித்து வந்த நிலையில் சுமார் 29 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 29 லட்சம் விண்ணப்பங்களில் 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. \
இந்நிலையில் புதிதாக மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இணைந்தவர்களின் வங்கி கணக்கில் இன்னும் மூன்று நாட்களில் அதாவது டிசம்பர் 12ஆம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பி ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமை தொகையை தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
