தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் முன்னாள் எம்எல்ஏ இருவரும் சேர உள்ளதாக தெரிகிறது. விஜய் முன்னிலையில் அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக மற்றும் மதிமுகவில் அரசியல் பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் விஜய் கட்சியில் இணைந்தார். அவருக்கு பிரச்சார செயலர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கட்சித் தாவ உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து ஏற்கனவே செங்கோட்டையன் சூசகமாக தெரிவித்திருந்தார். வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி ஈரோட்டில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு உள்ள நிலையில் அந்த கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர் என பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர்க்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சிகள் இணைய விரும்பும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் சிலர் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை தர வேண்டும் என சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில் ஏற்கனவே பாஜக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அதிமுகவிற்கு வந்த நிர்வாகிகளுக்கு மாநில பொறுப்பு வழங்க தமிழக வெற்றி கழகம் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் இந்த இணைப்பு நடைபெறும் என தெரிகிறது.
