பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 1ம் தேதி துவங்கியது. வருகிற 19ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டதால் சில நாட்களாக பாராளுமன்றம் முடங்கியது. திருப்பரங்குன்றம் விவகாரமும் பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதமாக நடந்தது. இந்நிலையில் நாட்டின் தேசிய பாடலாக வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மக்களவையில் பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதன் மூலம் வந்தே மாதரம் பாடல் குறித்த பல்வேறு முக்கியமான அறியப்படாத தகவல்கள் தெரிய வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலில் இருந்த முக்கிய வரிகள் கடந்த 1937ம் ஆண்டு நீக்கப்பட்டது, இந்தியாவின் பிரிவினைக்கு இதுதான் காரணம் என்று பிரதமர் மோடி ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
