கும்பகோணம் பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்களால் தாக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் இனம்கிளியூரை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று 12ஆம் வகுப்பு மாணவர் மதிய உணவு நேரத்தில் கழிவறைக்கு செல்லும் போது பதினோராம் வகுப்பு மாணவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து வியாழக்கிழமை மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியிலிருந்து வீட்டிற்கு 12 ஆம் வகுப்பு மாணவர் பட்டீஸ்வரம் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது பதினோராம் வகுப்பு மாணவர்கள் அவரை வழிமறித்து மரக்கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அந்த மாணவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 15 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளார்கள்.
