actor Kamal Haasan

ஏவிஎம் சரவணன் மறைவுக்கு வீடியோ வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன்… பேர் சொல்லும் பிள்ளையாக நானும் இருக்க விரும்புகிறேன் என உருக்கம்!

By Elango on மார்கழி 4, 2025

Spread the love

ஏவிஎம் நிறுவனம் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று காலை தனது 86வது வயதில் காலமானார். அவரது மறைவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது. ஏவிஎம் சரவணனுக்கும் எனக்கும் உள்ள உறவு என் அண்ணன் சந்திரஹாசன், சாருஹாசனுக்கும் எனக்கும் உள்ள உறவு போன்றது. இவர்களுக்கு எந்த மாதிரியான மரியாதை தருவது என்ற ஒரு குழப்பம் சிறுவயதில் ஏற்பட்டது உண்டு. நான் என் இருபது வயதை தாண்டும் போது இவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை என் அடிமனது முடிவு செய்துவிட்டது.

ஒரு தகப்பனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தான் இவர்களுக்கு தருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்படித்தான் என் மனதில் நினைத்துக் கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாகவே நான் உரிமை கொண்டாடுகிறேன். இப்படி உரிமை கொண்டாடும் நான் தனி மரம் அல்ல. ஏவிஎம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி இன்று வளர்ந்து வந்திருக்கிறேன்.

   

பெரும் கலைஞர்கள் விட்டுச் சென்ற அடிச்சுவட்டில் என் சிறுபாதத்தை எப்படி பதிந்து நடக்க வேண்டும் என்று பல பெரிய ஆசான்கள் எனக்கு இந்த வளாகத்தில் இந்த தோப்பில் இன்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். பேர் சொல்லும் பிள்ளையாக சரவணன் இருந்திருக்கிறார். அவரது சகோதரர்களும் தான். அது போன்ற ஒரு பிள்ளையாக நானும் இருக்க ஆசைப்படுகிறேன். என் ஆசையெல்லாம் இந்த தோப்பில் மூன்றாம் தலைமுறை தோன்றியிருக்கிறது. அவர்களும் என்னை போன்ற பல செடிகளை நட்டு இந்த பெரும்பள்ளியின் பெயர் நிலைத்திருக்க செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.