தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பாமகவில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தந்தைக்கு மகனுக்கும் ஏற்பட்ட தலைமை போட்டியால் பாமக தற்போது இரண்டாக பிரிந்து கிடக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும் இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடுநிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். இந்த சண்டை தற்போது உச்சத்தை எட்டிய நிலையில் இருவரும் மாறி மாறி அவர்களை எதிர்ப்பவர்களை கட்சியிலிருந்து தொடர்ந்து நீக்கி வந்தனர். இப்படியான நிலையில் கட்சியை நிறுவனர் ராமதாஸ் இனி அன்புமணிக்கு கட்சியில் இடம் இல்லை, வேண்டுமென்றால் தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும் என்று கூறி பரப்பரப்பி கிளப்பு இருந்தார்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இறங்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக திமுக அரசை சாடும் அன்புமணி தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளார். இதனிடையே தான் நடத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் பங்கேற்க ஈபிஎஸ்-க்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் ராமதாசுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவுகின்றன.
