சென்னை கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 35 வயது பெண் போலீஸ் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தன்னுடைய இரண்டு மகள்களுடன் அண்ணாநகர் பகுதியில் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே எட்டு மாதங்களுக்கு முன்பு அவருடைய செல்போனுக்கு தொடர்ந்து ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அந்த நம்பரை தொடர்பு கொண்ட போது பேசிய இளைஞர் தர்மபுரியை சேர்ந்த வசந்த் என்று அறிமுகம் செய்து கொண்டார். பிறகு இருவரும் பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியது. நான் உங்களை காதலிக்கிறேன், திருமணம் செய்து கொண்டு உங்கள் இரு குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறி வசந்த் நம்ப வைத்துள்ளார்.
இதனால் பெண் போலீஸ் தொடர்ந்து அவருடன் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் பிறகு இருவரும் நேரில் சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு நாள் பெண் போலீசின் வீட்டுக்கு வந்த வசந்த் புதிய தொழில் தொடங்க வேண்டி உள்ளது என்று கூறி உதவிக்காக பணம் கேட்டுள்ளார். இதனால் பெண் போலீஸ் மூன்று லட்சம் ரூபாய் பணம் மற்றும் 6 பவுன் தங்க நகைகள், இருசக்கர வாகன ஆவணங்கள் ஆகியவற்றை அவரிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு மேலும் 3 லட்சம் ரூபாய் கேட்ட நிலையில் பெண் போலீஸ் மறுத்ததால் அவரிடம் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார்.
இனி உன்னை பார்க்க வரமாட்டேன் என்று கூறிவிட்டு வசந்த் தொடர்பை துண்டித்து விட்டார். இதன் மூலம் தான் ஏமாற்றியதை உணர்ந்த பெண் போலீஸ் அதிர்ச்சி அடைந்து உடனே அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரியை சேர்ந்த 36 வயதான வசந்தை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி சங்கிலிகளை பறிமுதல் செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
