“சுகன்யா சம்ரித்தி யோஜனா” என்பது மத்திய அரசின் ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். இது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான செலவுகளைச் சமாளிக்க தொடங்கப்பட்ட திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் ஒரு கணக்கைத் தொடங்கலாம். இதில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை வைப்புத்தொகை செலுத்தலாம்.
மேலும் இதற்கு நல்ல வட்டி விகிதமும் வரிச் சலுகைகளும் கிடைக்கும். இச்சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும்போது, பிற சேமிப்புகளை விட அதிக வட்டி விகிதம், வரி சலுகை மற்றும் அரசு உத்தரவாதம் உள்ளிட்ட பல நன்மைகளும் இதில் உண்டு. கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு அடைகிறது. பெண் குழந்தை 18 வயதை அடைந்த பிறகோ அல்லது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகோ, கணக்கில் உள்ள தொகையின் 50% வரை கல்வி அல்லது திருமணத்திற்காகப் பயன்படுத்தலாம்.
