ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் ஐஏஎஸ் அதிகாரியான சின்ன ராமுடு என்பவருடைய மகள் மாதுரி சாஹிதிபாய் (27). இவர் கடந்த மாதம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த ராஜேஷ் நாயுடு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இரு விட்டாரின் சம்மதத்துடன் திருமணம் ஆகி ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் திருமணமான சில மாதங்களில் பிறந்த வீட்டில் வரதட்சனை கேட்டு வாங்கி வரும்படி மாதுரியை கணவர் ராஜேஷ் துன்புறுத்தியுள்ளார். மகளுக்கு நடக்கும் கொடுமையை அறிந்த தந்தை மகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த மாதுரி சம்பவத்தன்று இரவு பெற்றோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மகள் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது கழிவறையில் மாதுரி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாதுரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வரதட்சணை கொடுமையால் தான் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை புகார் அளித்துள்ள நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
