மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த நரேந்திர கமல் சிங் என்ற வாலிபர் குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த புஷ்ப தேவி என்ற 20 வயது இளம் பெண்ணுடன் கமலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக லிவ் இன் முறையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 29ஆம் தேதி இரவு காதல் ஜோடி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கமல் சிங் வீட்டில் இருந்த மரக்கட்டையால் புஷ்ப தேவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த புஷ்ப தேவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்ற கமல் சிங்கை கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் இன்று திடீரென மயங்கி விழுந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
