மும்பையில் குழந்தைகளை கடத்திப் பிச்சை எடுக்க வைப்பது அல்லது விற்பது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்தேரி கிழக்கு மேக்வாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுக்ராமின் 9 வயது மகள், பிற்பகல் 1 மணிக்கு வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனாள். மாலையில், அந்தேரி ரயில் நிலையத்தில் அந்தச் சிறுமி பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததை சுக்ராமின் உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சிறுமியை மீட்கச் சென்றபோது, அவளுடன் இருந்த 17 வயது சிறுமி ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
சிறுமி அளித்த வாக்குமூலத்தில், விளையாடிக் கொண்டிருந்தபோது சாக்லேட் கொடுத்து, காலி பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து வரச் சொல்லியதாகவும், பின்னர் மாகிம் தர்கா மற்றும் அந்தேரி ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பிச்சை எடுக்கச் சொல்லி, அதற்கான வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அந்தப் சிறுமி, மேலும் பல குழந்தைகளை இவ்வாறு கடத்தி பிச்சை எடுக்க வைத்தது தெரியவந்தது.
